எங்கள் தெரு முனையைக்
கடக்கும் போதெல்லாம்
நாயரின் தேநீர்க் கடையைப்
பார்த்துக்கொண்டே செல்வது
பழக்கமாகிப் போனது எனக்கு.
குவளையை உயரப் பிடித்து
நேர்த்தியாயும், அழகாகவும்
நாயர் தேநீர் ஆற்றும் பாங்கிற்கு
நான் அடிமையாகிப் போனேன்.
சீரான நூலைப் போல
சிந்தாமல், சிதறாமல்
தேநீர் ஆற்றுவது ஒரு
கலையாகத் தெரியும் என்
கண்களுக்கு.
இத்தனைக்கும் ஏனோ அவரிடம்
தேநீர் வாங்கி அருந்த மட்டும்
தோன்றியதில்லை ஒரு போதும்.
அனாயாசமாய் நாயர் தேநீர் ஆற்றுவதும்
அதைப் பார்க்க நேர்கையில் நான் ரசிப்பதும்
அனிச்சைச் செயல்களாய்
அரங்கேறிக் கொண்டிருந்தன.
திடீரென ஒரு மழை நாளில்
கடை மூடிக் கிடக்க
கதவின் மேல் ஒட்டப்பட்டிருந்த
'கண்ணீர் அஞ்சலி' சுவரொட்டி
அறிவித்தது நாயரின்
அகால மரணத்தை.
சிறு கும்பல்களாய்
ஆங்காங்கே நின்றிருந்த
நாயரின் வாடிக்கையாளர்களும்
நண்பர்களும்
தங்கள் வேதனையை
விசும்பியும், அழுதும்
வெளிப்படுத்திக் கொண்டிருந்தார்கள்.
என்னையும் அறியாமல்
ஏதோ ஒரு கும்பலில் கலந்த பின்
நானும் அழுதேன்
நாயருக்காக...
அவரது
நண்பனாகவும் இல்லாமல்
வாடிக்கையாளனாகவும் இல்லாமல்.
3 கருத்துகள்:
மிக அருமை.நம் மனம் கவர்ந்த தலைவர்கள்
கவிஞர்கள் கலைஞர்கள் எவரையாவது நாம்
எதிர்பாராது இழக்க நேரும்போது இதுபோன்று
பெருத்த சோகம் நம் மனம் கவ்விப்போவதுண்டு.
அதை மிகச் சரியாக இந்தப்பதிவு செய்து போகிறது.
நான் கூட நடிகை ஷோபா அவர்களின் மரணத்தில்
இந்த பெரும் சோகத்தை அனுபவித்திருக்கிறேன்
பாறைக்கடியில் சிக்கிக்கிடக்கும் மயிலிறகினை
விடுவித்தல் போல சில மெல்லிய உணர்வுகளை
விடுவித்துச் செல்கிறது இந்தப் பதிவு.
தொடர வாழ்த்துக்கள்
தினமும் செல்லும் பாதையில் சந்திக்கும் மனிதர்களை பேசி பழகா விட்டாலும், அவர்களை புதிதாக ஒரு இடத்தில் சந்திக்ககும் போது புன்னகைக்கிறோமே, அதுபோல் தான் இந்த உணர்வும், நல்ல கவிதை வாழ்த்துக்கள்.
நம்பிக்கைபாண்டியன்,
எனது வலைப்பதிவிற்கு வருகை தந்து, கருத்துக்களைப் பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி.
கருத்துரையிடுக