8.3.11

நம்பிக்கை

தடை பட்டுக் கொண்டிருந்த
தங்கையின் திருமணம்
வீடு முழுக்க படர விட்டிருந்தது
சோகத்தின் நெடியை.
கலகலப்பும், கிண்டல் பேச்சுக்களும்
காணமல் போய்
நெடுநாட்களாகி விட்டிருந்தன.
தற்காலிகமாய்
பரிகாரங்களிலும்,
பிரார்த்தனைகளிலும்
ஆறுதல் தேடிக் கொண்டிருந்தார்கள்
அம்மாவும், அப்பாவும்.

எதிலும் ஓட்ட இயலாமல்
தவித்த மனதிற்கு
தனிமை மட்டுமே
தந்தது ஆறுதலை.
உறங்க நினைத்தாலும்
இமைகள்
இறங்க மறுத்தன.
மனக் குகைக்குள்
திக்குத் தெரியாமல்
திமிறி ஓடிக் கொண்டிருந்த
குழப்பமென்னும் குதிரையை
கட்டுப்படுத்தும் முயற்சியில்
களைப்பே மிஞ்சியது.

தூக்கம் வராமல்
தொலைந்து போனதில்
அகண்டு பரந்திருந்த 
ஆகாயத்தைப் பார்த்தபடியே
படுத்துக் கிடந்தேன்.
தேகம் தேய்ந்துகொண்டிருந்தாலும் 
ஒளி வீசும் தன் கடமையை
ஒத்திப் போடவில்லை நிலா.
எப்போது வேண்டுமானாலும்
எரிகற்களாகி விழப்போகும்
கனல்த் துண்டு நட்சத்திரங்களோ 
கண்சிமிட்டிச் சிரித்தன.
எங்கோ தூரத்தில்
மின்னல் கீற்றுக்கள்
சாட்டைகளாய் சுழன்று பின்
சட்டென்று மறைந்து போயின.
எல்லா நிகழ்வுகளையும்
உள் வாங்கிக் கொண்டு
அமைதி காத்தது வானம். 


எதுவோ புரிந்தது போலவும்,
ஒன்றுமே புரியாதது போலவும்
எண்ண அலைகள்
எழும்பி, எழும்பி
மனம் முழுக்கப்
பரவிப் படர்ந்தன . 
நடக்கும் நிகழ்வுகளுக்கு 
நாமா பொறுப்பு? 
நடப்பதை மட்டும் 
பார்த்துக் கொண்டிருக்கும் 
பாத்திரம் மட்டுமே  
தரப்பட்டிருக்கிறது 
உனக்கு எனச் சொல்லி
கெக்கரித்தது ஒரு குரல். 
இல்லையில்லை 
நடப்பவற்றை 
நமக்குச் சாதகமாய் 
மாற்றி கொள்வதற்க்கான 
மந்திர சாவி என்னவோ 
எல்லோரின் கைகளிலும்தான் 
கொடுக்கப் பட்டிருக்கிறது என
சற்றே கோபமாய்
தர்க்கம் செய்தது இன்னொன்று. 

நீண்ட நேர மனப் போராட்டத்தில்
எதைத்  தெரிவு செய்வது எனத்
தீர்மானிக்கும் முன்பே
தூங்கி  விட்டிருந்தேன்.
விடியலில் கண் விழிக்கையில்
புதிதாய் உணர்ந்தேன்
எல்லாமே புதிதாய்.





10 கருத்துகள்:

Yaathoramani.blogspot.com சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
Yaathoramani.blogspot.com சொன்னது…

பாரதி சொன்னதைப் போல
"இன்று புதிதாய் பிறந்தோம் "
என்கிற மனோபாவம் மட்டும்
வந்துவிட்டால் கடலின் ஆழம் கூட
கால் நுனி அளவுதானே
நம்பிகையூட்டும் நல்ல பதிவு
தொடர வாழ்த்துக்கள்

கீதமஞ்சரி சொன்னது…

//நடப்பவற்றை
நமக்குச் சாதகமாய்
மாற்றி கொள்வதற்க்கான
மந்திர சாவி என்னவோ
எல்லோரின் கைகளிலும்தான்
கொடுக்கப் பட்டிருக்கிறது என
சற்றே கோபமாய்
தர்க்கம் செய்தது இன்னொன்று.//

மந்திரச்சாவியைக் கையில் வைத்துக்கொண்டே மாயச்சிறைக்குள் அகப்பட்டிருக்கும் நம் பேதைமையை என்னவென்று சொல்வது? நல்ல கவிதை. நல்ல கருத்து.

சாகம்பரி சொன்னது…

பிரச்சினையின் சீரிய தன்மையை பொறுத்து மந்திர சாவியை பயன்படுத்தும் தந்திரம் புரிய வருகிறது - அது நம் மனம் செய்யும் மாயம். கவிதை சிந்திக்க வைக்கிறது.

சுந்தரா சொன்னது…

//மனக் குகைக்குள்
திக்குத் தெரியாமல்
திமிறி ஓடிக் கொண்டிருந்த
குழப்பமென்னும் குதிரையை
கட்டுப்படுத்தும் முயற்சியில்
களைப்பே மிஞ்சியது.//

அருமையான ஒப்பீடு. நம்பிக்கையூட்டுகிற நல்ல கவிதை.

பாராட்டுக்கள்!

இராஜராஜேஸ்வரி சொன்னது…

விடியலில் கண் விழிக்கையில்
புதிதாய் உணர்ந்தேன்
எல்லாமே புதிதாய்./

நம்பிக்கை விதையாய் பகிர்வுக்குப் பாரட்டுக்கள்.

vimalanperali சொன்னது…

தர்க்கங்களும்.கோபங்களும்,தூக்கமின்மையும் ஒரு புத்துணர்வை தந்திருப்பது நல்ல விஷயம்தானே!தர்க்கங்களும்.கோபங்களும்,தூக்கமின்மையும் ஒரு புத்துணர்வை தந்திருப்பது நல்ல விஷயம்தானே!

ShankarG சொன்னது…

கருத்து அளித்த ராஜ ராஜேஸ்வரி அவர்களுக்கு நன்றிகள்.

ShankarG சொன்னது…

எனது வலைப்பதிவிற்கு வருகை தந்து கருத்துக்களைப் பதிவு செய்த சுந்தரா அவர்களுக்கு நன்றி.

ShankarG சொன்னது…

திரு விமலன் அவர்களின் கருத்து வித்தியாசமானது மட்டுமல்ல ஏற்கத்தக்கதும் கூட. நன்றி திரு விமலன் அவர்களே.