30.10.11

பரிணாம வளர்ச்சி 
நண்பனின் வீட்டில் விருந்து.  
சம்பிரதாயமாய்  
சிற்றுண்டிகள் வாங்கிச் சென்று  
குழந்தையின் கையில் கொடுத்தேன். 
பெற்றுக் கொண்டதும் 
சம்பிரதாயமாய்
ஒரு புன்னகையைத்
தந்துவிட்டுப் போனது
குழந்தையும்.

29.10.11

மனத்தராசு 
நகரமும், கிராமமும் ஒரு நாள் என் 
கனவில் வந்தன சண்டையிட்டவாறே. 
நான்தான் சிறந்தவென்று நகரம் சொன்னது.
நானின்றி நீயில்லை என்று வாதிட்டது கிராமம். 

இருவரில் சிறந்தவரை
எனது மனத் தராசில் எடைபோட்டு 
தேர்வு செய்யலாம் என்றேன். 
ஒப்புக்கொண்டன இரண்டும்.

முதலில்
நகரத்தின் அம்சங்களையெல்லாம்
எடுத்து வைத்தேன் ஒரு தட்டில்
ஒவ்வொன்றாய்.
நியான் விளக்குகள், கண்ணைப்
பறிக்கும் விளம்பரப் பலகைகள் 
வித, விதமாய் மோட்டார் வாகனங்கள்
வானத்தையே தொட முயற்சிக்கும்
தொகுப்பு வீடுகள்
செல்வச் செழிப்பில் கொழிக்கும்
பன்னாட்டு நிறுவனங்கள்
பிரமாண்ட சாலைகள்
பிரமிக்க வைக்கும் வணிக வளாகங்கள்
சர்வதேச தரத்தில் கல்வி அளிக்கும்
பள்ளிகள், கல்லூரிகள்
பல்கலைக் கழகங்கள் 
அறிவையும், திறனையும்
செம்மைப்படுத்த உதவிடும்
சிறப்பு பயிற்சி மையங்கள்
அதிசயிக்க வைக்கும் பூங்காக்கள்
சிற்றுண்டிச் சாலைகள், கடற்கரை விடுதிகள்
ஆடையைத் தவிர வேறெதிலும்
சேமிப்பை விரும்பாத
நவீனயுக யுவதிகள்
வாழ்க்கையோடு கலந்துவிட்ட
வசதி, வாய்ப்புக்கள் என
எல்லாவற்றையும் எச்சரிக்கையோடு
அடுக்கி முடித்தேன்.
நல்ல எடையோடு
எதிர்புறத் தட்டை
ஏளனமாய்ப் பார்த்தது 'நகரம்'.

மறு தட்டிலோ
இயற்கை வளங்களான
மாசு படாத காற்று
வற்றாத நீர் நிலைகள்
பச்சைப் புல்வெளிகள்
மரங்கள், தோட்டங்கள்
மக்களின் அடிப்படைத் தேவையான
பயிர்கள், தானியங்கள் உற்பத்தி
பொதுநல நோக்கு, பரந்த மனப்பான்மை
எளியவனுக்கு உதவுதல்
எதிர்பார்ப்பற்ற அன்பு, ஊர் கட்டுப்பாடு
எளிய வாழ்க்கை முறை
உறவுகளையும், நட்புகளையும்
ஆராதிக்கும் பண்பு
மழை சார்ந்து நிற்கும்
மண்ணைச் சார்ந்து
பிழைப்பு நடத்துவதில்
பெருமை கொள்ளும் மக்கள்
நிலையற்ற வருமானத்திலும்
நிறைவாய் உணர்கிற மனப்பாங்கு
பிறருக்கு உதவிடத் தயங்காத
மனித நேயமிக்க ஈர மனங்கள் என
'கிராமத்தின்' அம்சங்களையெல்லாம்
கவனமாய் எடுத்து வைத்தேன்.
கூடுதல் எடையோடு
வெற்றி கண்டது 'கிராமம்'.

கடுமையான போட்டியில்
கிராமத்தின் வெற்றியை
குறிப்பாய்த் தீர்மானித்தது
எதுவாயிருக்கும்? என்று
எனக்குள் அப்போது
எழுந்தது ஒரு கேள்வி.

'மனிதம்' என்கிற
மகத்தான அம்சமே என 
அசரீரி ஒலிக்க
திடுக்கிட்டுக் கண் விழித்தேன்.
கலைந்து போயிருந்தது
கனவு.










பாட்டி
பள்ளிக்கூடம் விடுவதற்குள்ளாகவே
பாதியில் வேலைக்காரன் வந்து 
அனுமதி பெற்று என்னை 
அழைத்து வந்தான் வீட்டிற்கு
பாட்டி இறந்துவிட்டாளாம்.
வீட்டுக் கூடத்தில் கிடத்தி இருந்தார்கள் 
பாட்டியை. 
வெள்ளைத் துணி, பூமாலைகள்
சுற்றிலும் அமர்ந்திருந்த 
சொந்தங்களின் அழுகுரல்கள்.
பாட்டியின் முகத்தையே
பார்த்துக் கொண்டிருந்தேன். 
யாரோ ஒரு உறவுக்காரர்
கைத்தாங்கலாய் அழைத்துப்போய்
உட்கார வைத்தார் தூணின் அடியில்.
துக்கச் சாயம் வீடெங்கும்
பூசப்பட்டிருந்தது.
கையருகில் பாட்டி உபயோகித்த
ஊசி, நூல்ப் பெட்டி. 
மெல்ல எடுத்து கைகளுக்குள்
வைத்துக் கொண்டேன்.
ஒவ்வொரு முறையும்
ஊசியில் நூல் ஏற்ற முயன்று 
இயலாமல் தோற்றுப் போகும் தருணங்களில்
'அடே என்னப் பெத்த ராசா' என
ஊருக்கே கேட்பது போல 
உரத்த குரலில் உதவிக்கு அழைக்கும் 
பாட்டியின் நினைவு சுட்டது என்னை.
ஊசிப்பெட்டி பாட்டியின்
கைகளாய் மாறியிருக்க
பற்றிக் கொண்டேன் இறுக்கமாய்
விட்டு விட மனமின்றி.
பிரமை என்று உணர்ந்த கணம்
அழத் தொடங்கினேன் 
பெருங் குரலெடுத்து.



26.10.11

மண் வாசனை 

மனைவி, குழந்தைகளோடு 
விடுமுறையைக் கழிக்க 
நான் பிறந்து, வளர்ந்த 
ஊருக்கு வந்திருக்கிறேன் 
எட்டு ஆண்டுகள் 
இடைவெளிக்குப் பிறகு. 

பொறியியல் கல்லூரியில்
படிப்பை முடித்த பின்
'திரை கடலோடியும் திரவியம் தேட'
கைநிறைய சம்பளத்துடன்
வெளிநாட்டில் வேலை.

வித்தியாசமான கலாச்சாரம்
வேற்று மொழி 
ஏராளமான சலுகைகள்
எதிர்பாராத வசதிகள்
இனிய குடும்பமென
எல்லாம் இருந்தாலும்
எந்திரத்தனமாய் ஓடிக்கொண்டிருக்கிறது
வாழ்க்கை. 
நீண்ட இடைவெளிக்குப் பின்
சொந்த ஊருக்கு வந்ததில்
ஆர்வமும், மகிழ்ச்சியும்
எனக்குள் சற்று அதிகமாகவே 
இருந்தன. 
மனைவி, குழந்தைகளுக்கோ 
எல்லாமே அதிசயமாய்ப் பட்டது. 
பெரிதாய் மாறிவிடவில்லை
எங்கள் கிராமம்.
மந்தையம்மன் கோவிலும்
பேருந்து நிறுத்தமும்
சுற்றியிருக்கும் சிறு கடைகளும்
மாலை நேரங்களில்
ஆங்காங்கே கூடி நின்று 
அன்றாட நடப்புகளைப் 
பேசி மகிழும் மனிதர்களுமாய்
நான் சிறு வயதில் பார்த்து
ரசித்தவை எல்லாம்
அப்படியே இருந்தன. 
எங்களது வீடும்கூட...
புழக்கடையும், மாட்டுக் கொட்டமுமாய்
அதற்கே உரிய அழகினை 
இழந்து விடாமல் இருக்கிறது
இன்னமும் கூட. 
அம்மாவும், அப்பாவும்
ஆனந்தக் கண்ணீரோடு
ஆரத் தழுவி வரவேற்றார்கள். 
அண்ணன், அண்ணி
தம்பி, தங்கையென
சத்தியமாய் எல்லோருமே
சந்தோசப்பட்டார்கள். 

பால்ய நண்பர்களை
சந்தித்துப் பேசியபின்
குளக்கரை சாலையில்
வழக்கமாய் சிறு வயதில்
மாலைக் காற்று வாங்கும்
பாலத்தின் மேல் அமர்ந்தபோது 
குளிரூட்டப்பட்ட அறையும்,
குஷன் நாற்காலியும் 
எனது கண்களுக்கு
சாதாரணமாய்ப் பட்டன. 
பெற்றோருக்கும், பெரியோருக்கும் 
தெரியாமல் குதித்து விளையாடி
 நீச்சல் கற்றுக் கொண்ட 
 நல்லதங்காள் கண்மாய் 
 ஞாபகமாய்ச் சிரித்தது 
 என்னைப் பார்த்து. 
சுற்றங்களின் வீடுகளுக்கு
வலியச் சென்று பார்த்துவிட்டு
வீடு திரும்புகையில்
மனம் முழுக்க பரவிப்
படர்ந்திருந்தது அவர்களது
அன்பும், பாசமும்.
எந்தப் பிரதிபலனும்
எதிர்பாராத நண்பர்களின் நட்போ
எனது இதயத்தையே ஊடுருவி
உட்சென்று அமர்ந்து கொண்டது.
புல்கட்டு விற்கும் கருப்பையாவும்
விறகுக்கடை மாயாண்டியும்
அடையாளம் கண்டு ஓடி வந்து
நலம் விசாரித்துப் போனார்கள்
கண்களில் நீர் தளும்ப.
இடையில் வந்த முளைப்பாரி
திருவிழாவோ உள்ளத்தையே
கொள்ளை கொண்டது.
முப்பது நாட்கள் விடுமுறையும்
நிமிடங்களாய்க் கரைந்து போக
இதோ விமானத்தில்
பயணித்துக் கொண்டிருக்கிறோம்
மறுபடியும் பிழைப்பைத் தொடர.
இதயமெங்கும் ஏதோ ஒரு
அழுத்தம் நிரம்பியிருக்கிறது.
ஆழ்ந்த சிந்தனையில்
மூழ்கிப் போகிறேன்.
பின் ஏதோ ஒரு தெளிவுடன் 
தீர்மானித்துக் கொள்கிறேன் 
இனி ஒவ்வொரு வருடமும்
பிறந்த மண்ணில்தான்
விடுமுறையைக் கழிப்பதென்று.
மெல்லத் திரும்பி மனைவி,
குழந்தைகளைப் பார்க்கிறேன்
அவர்களது புன்னகை அதை
ஆமோதிக்கிறது அழுத்தமாய்.