26.10.11

மண் வாசனை 

மனைவி, குழந்தைகளோடு 
விடுமுறையைக் கழிக்க 
நான் பிறந்து, வளர்ந்த 
ஊருக்கு வந்திருக்கிறேன் 
எட்டு ஆண்டுகள் 
இடைவெளிக்குப் பிறகு. 

பொறியியல் கல்லூரியில்
படிப்பை முடித்த பின்
'திரை கடலோடியும் திரவியம் தேட'
கைநிறைய சம்பளத்துடன்
வெளிநாட்டில் வேலை.

வித்தியாசமான கலாச்சாரம்
வேற்று மொழி 
ஏராளமான சலுகைகள்
எதிர்பாராத வசதிகள்
இனிய குடும்பமென
எல்லாம் இருந்தாலும்
எந்திரத்தனமாய் ஓடிக்கொண்டிருக்கிறது
வாழ்க்கை. 
நீண்ட இடைவெளிக்குப் பின்
சொந்த ஊருக்கு வந்ததில்
ஆர்வமும், மகிழ்ச்சியும்
எனக்குள் சற்று அதிகமாகவே 
இருந்தன. 
மனைவி, குழந்தைகளுக்கோ 
எல்லாமே அதிசயமாய்ப் பட்டது. 
பெரிதாய் மாறிவிடவில்லை
எங்கள் கிராமம்.
மந்தையம்மன் கோவிலும்
பேருந்து நிறுத்தமும்
சுற்றியிருக்கும் சிறு கடைகளும்
மாலை நேரங்களில்
ஆங்காங்கே கூடி நின்று 
அன்றாட நடப்புகளைப் 
பேசி மகிழும் மனிதர்களுமாய்
நான் சிறு வயதில் பார்த்து
ரசித்தவை எல்லாம்
அப்படியே இருந்தன. 
எங்களது வீடும்கூட...
புழக்கடையும், மாட்டுக் கொட்டமுமாய்
அதற்கே உரிய அழகினை 
இழந்து விடாமல் இருக்கிறது
இன்னமும் கூட. 
அம்மாவும், அப்பாவும்
ஆனந்தக் கண்ணீரோடு
ஆரத் தழுவி வரவேற்றார்கள். 
அண்ணன், அண்ணி
தம்பி, தங்கையென
சத்தியமாய் எல்லோருமே
சந்தோசப்பட்டார்கள். 

பால்ய நண்பர்களை
சந்தித்துப் பேசியபின்
குளக்கரை சாலையில்
வழக்கமாய் சிறு வயதில்
மாலைக் காற்று வாங்கும்
பாலத்தின் மேல் அமர்ந்தபோது 
குளிரூட்டப்பட்ட அறையும்,
குஷன் நாற்காலியும் 
எனது கண்களுக்கு
சாதாரணமாய்ப் பட்டன. 
பெற்றோருக்கும், பெரியோருக்கும் 
தெரியாமல் குதித்து விளையாடி
 நீச்சல் கற்றுக் கொண்ட 
 நல்லதங்காள் கண்மாய் 
 ஞாபகமாய்ச் சிரித்தது 
 என்னைப் பார்த்து. 
சுற்றங்களின் வீடுகளுக்கு
வலியச் சென்று பார்த்துவிட்டு
வீடு திரும்புகையில்
மனம் முழுக்க பரவிப்
படர்ந்திருந்தது அவர்களது
அன்பும், பாசமும்.
எந்தப் பிரதிபலனும்
எதிர்பாராத நண்பர்களின் நட்போ
எனது இதயத்தையே ஊடுருவி
உட்சென்று அமர்ந்து கொண்டது.
புல்கட்டு விற்கும் கருப்பையாவும்
விறகுக்கடை மாயாண்டியும்
அடையாளம் கண்டு ஓடி வந்து
நலம் விசாரித்துப் போனார்கள்
கண்களில் நீர் தளும்ப.
இடையில் வந்த முளைப்பாரி
திருவிழாவோ உள்ளத்தையே
கொள்ளை கொண்டது.
முப்பது நாட்கள் விடுமுறையும்
நிமிடங்களாய்க் கரைந்து போக
இதோ விமானத்தில்
பயணித்துக் கொண்டிருக்கிறோம்
மறுபடியும் பிழைப்பைத் தொடர.
இதயமெங்கும் ஏதோ ஒரு
அழுத்தம் நிரம்பியிருக்கிறது.
ஆழ்ந்த சிந்தனையில்
மூழ்கிப் போகிறேன்.
பின் ஏதோ ஒரு தெளிவுடன் 
தீர்மானித்துக் கொள்கிறேன் 
இனி ஒவ்வொரு வருடமும்
பிறந்த மண்ணில்தான்
விடுமுறையைக் கழிப்பதென்று.
மெல்லத் திரும்பி மனைவி,
குழந்தைகளைப் பார்க்கிறேன்
அவர்களது புன்னகை அதை
ஆமோதிக்கிறது அழுத்தமாய்.


4 கருத்துகள்:

Yaathoramani.blogspot.com சொன்னது…

பிழைப்புக்காக புலம் பெயர்ந்தவர்களின்
மனோ நிலையை அப்படியே அசலாய்
பிரதிபலித்துப் போகும் அருமையான பதிவு
மண் வாசனைக்கு முன்னே
மல்லைகை வாசமாவது
மரிக் கொழுந்து வாசமாவது
அருமையான பதிவு
தொடர வாழ்த்துக்கள்

S.Venkatachalapathy சொன்னது…

விடுமுறையைக் கழிக்க, மலரும் நினைவுகளை அசைபோட, திருவிழாக்களில் பங்கு கொள்ள மட்டும் தான் பிறந்த மண்.

அத்தனை வளங்கள் இருந்தும் சரியான அரசியல் நிர்வாகம் இல்லாத ஒரே காரணத்தால் வாழ்க்கைக்கு வேண்டிய குளிரூட்டப்பட்ட அறையும், குஷன் நாற்காலியும் இங்கு அமைத்துக்கொள்ள இவர்கள் முயற்சி எடுக்க மாட்டார்கள் போலும்.

ShankarG சொன்னது…

ரமணி,

தங்கள் வரவுக்கும், வாழ்த்திற்கும் மிக்க நன்றி.

ShankarG சொன்னது…

வெங்கட்,

நான் உங்கள் கருத்தோடு உடன்படுகிறேன். பாசம் இம்மக்களது பலம் என்றால், சுய சிந்தனையின்றி இருத்தல் அவர்களது பலவீனம். எனவேதான் மண்ணை நேசிப்பவர்கள்கூட புலம் பெயர வேண்டிய நிர்பந்தம் உண்டாகிறது. வரவிற்கும், கருத்தினைப் பதிவு செய்தமைக்கும் எனது நன்றிகள்.