28.2.11

கவிதையும் காதலும்

கற்பனையும் பொய்யும்தான்
கவிதைக்கு அழகு என்றாய்.
என் காதலும்
கவிதையாகிப் போனது
பொய்யென்று நீயதை
புறக்கணித்து விட்டதால்.

ஆராதனை

எங்கள் தெரு முனையைக் 
கடக்கும் போதெல்லாம் 
நாயரின் தேநீர்க் கடையைப் 
பார்த்துக்கொண்டே செல்வது 
பழக்கமாகிப் போனது எனக்கு. 

குவளையை உயரப் பிடித்து 
நேர்த்தியாயும், அழகாகவும் 
நாயர் தேநீர் ஆற்றும் பாங்கிற்கு 
நான் அடிமையாகிப் போனேன்.

சீரான நூலைப் போல 
சிந்தாமல், சிதறாமல் 
தேநீர் ஆற்றுவது ஒரு 
கலையாகத் தெரியும் என் 
கண்களுக்கு. 

இத்தனைக்கும் ஏனோ அவரிடம் 
தேநீர் வாங்கி அருந்த மட்டும் 
தோன்றியதில்லை ஒரு போதும். 
அனாயாசமாய் நாயர் தேநீர் ஆற்றுவதும் 
அதைப் பார்க்க நேர்கையில் நான் ரசிப்பதும் 
அனிச்சைச் செயல்களாய்
அரங்கேறிக் கொண்டிருந்தன. 

திடீரென ஒரு மழை நாளில் 
கடை மூடிக் கிடக்க 
கதவின் மேல் ஒட்டப்பட்டிருந்த
'கண்ணீர் அஞ்சலி' சுவரொட்டி 
அறிவித்தது நாயரின் 
அகால மரணத்தை. 

சிறு கும்பல்களாய் 
ஆங்காங்கே நின்றிருந்த 
நாயரின் வாடிக்கையாளர்களும் 
நண்பர்களும் 
தங்கள் வேதனையை 
விசும்பியும், அழுதும் 
வெளிப்படுத்திக் கொண்டிருந்தார்கள். 

என்னையும் அறியாமல் 
ஏதோ ஒரு கும்பலில் கலந்த பின் 
நானும் அழுதேன் 
நாயருக்காக... 
அவரது 
நண்பனாகவும் இல்லாமல் 
வாடிக்கையாளனாகவும் இல்லாமல்.





 

13.2.11

இளகின மனசு

ஒரு கோடைக்கால ஞாயிற்றுக்கிழமையில்
வாசலில் வந்த ஐஸ் வண்டிக்காரனிடம்
குச்சி ஐஸ் வாங்கி சுவைக்கத் துவங்கியதும்
கம்பிகளினூடே
ஏக்கம் நிறைந்த கண்களுடன்
என்னையே பார்த்துக் கொண்டிருந்தான்
எதிர் வீட்டுச் சிறுவன்!

சிறுவனுக்கு வாங்கித் தருவதிலும்
சிக்கல் இருப்பதாய்த் தோன்ற
தொடர்ந்து சுவைக்கவும்
மனமின்றிப் போக
கையிலிருந்த ஐஸைத்
தூர எறிந்தேன்!

கொஞ்சம், கொஞ்சமாய்
கரையத் தொடங்கியது
குச்சி ஐஸ்!
கூடவே...
எனது இயலாமையும்
சிறுவனின் ஏக்கமும்!


8.2.11

கொசு

காதருகில் ரீங்காரமிட்டுக்  
கடந்து சென்றது கொசு!
எழுந்தோடிச் சென்று
கதவு, சன்னல்களை மூடி
புகைச்சுருளைப் பொருத்தி வைத்து
முழு வேகத்தில்
மின் விசிறி சுழல விட்டு
மூச்சிறைக்க அமர்ந்து கொண்டேன்
நாற்காலியில்!
மறுபடியும் காதருகில்
அதே ரீங்காரம்...
கைகளை ஆயுதமாக்கிக்
காத்திருந்தேன்
அடுத்த முறை அதை
அடித்து ஒழித்துவிடும் எண்ணத்தோடு!
பின் கழுத்தில், கைகளில்,
கணுக்காலில் என
இடங்களை மாற்றி, மாற்றி
வெற்றிகரமாய் கடித்தது கொசு!
பலமுறை அடிக்க முற்பட்டும்
தப்பித்துக் கொண்டேயிருந்தது
அகப்படாமல்!
நீண்ட நேரப் போராட்டத்தில்
எனது கைகளுக்குள்
சிக்கிக் கொண்டது ஒரு வழியாக!
எதையோ சாதித்துவிட்ட திருப்தி
எனக்குள்!
உள்ளங்கை விரித்துப் பார்த்தேன்...
ஒட்டிய நிலையில்
உயிரை விட்டிருந்தது
பொல்லாத கொசு!
அதைக் கொன்று விடும் தீவிரத்தில்
பைத்தியக்காரனைப் போல
பலமுறை என்னை நானே
அடித்துக் கொண்டதை சுட்டிக்காட்டி
நகைப்பது போலிருந்தது
நசுங்கிக் கிடந்த கொசுவைப் பார்க்கையில்!







4.2.11

மறதி

மன வயலின்
நினைவுப் பயிர்களை
அவ்வப்போது
மேயும் மாடு!

இயல்பு வாழ்க்கை

பைக்குள் திணிக்கப்பட்ட
பழைய துணிகளாய்
பேருந்திற்குள்
பிதுங்கிப் பயணிக்கிறது
மக்கள் கூட்டம்!
செருப்பணிந்த கால்களின் மிதி
மூச்சைத் திணறடிக்கும் நெரிசல்
அருவெருக்கத்தக்க உரசல்கள்
அநாகரீகத் தள்ளு முள்ளு
நடத்துனரின் வசவு...
இவற்றின்
எந்தப் பாதிப்பையும்
பிரதிபலிக்கவில்லை
பேருந்தை விட்டு
இறங்கிச் செல்வோரின்
முகங்கள்!

உண்மைக் காதல்

அன்பே... அது ஒரு அந்திப் பொழுது!
கடற்கரையில் நாமிருவரும்
பக்கம், பக்கமாய்!

எழும்பி விழுந்த அலைகளைப் பார்த்து
ஆர்ப்பரித்தன உன் கண்கள்!

உருச் செய்த வீட்டுப் பாடத்தை
ஆசிரியரிடம்
நடுக்கத்துடன் ஒப்புவிக்கும்
ஒரு மாணவனைப் போல
கண்மணி உன்னிடம் என்
காதலைச் சொன்னேன்
கவனமாக!

நீயோ
மௌனமாய் எழுந்துனது
ஆடையில் ஒட்டிக் கிடந்த
மணலை உதிர்த்தவாறே
மறைந்து போனாய்
ஒரு புள்ளியாகி!

இனியவளே...
உன்னிடம் நான் உரைத்த
உண்மைக் காதல்
கலந்து கிடக்கிறது
நீ உதிர்த்துச் சென்ற
மணல்களில்
இன்னமும் கூட!

மொழி


சன்னலோர மரக்கிளையில்
உட்கார்திருந்த ஒற்றைக்கிளி
கீ... கீ...யென
கத்திக் கொண்டேயிருந்தது
சீரான இடைவெளியில்!

என்னவாயிற்று?
இரை கிடைக்கவில்லையா?
தன் குஞ்சுகளைத் தொலைத்துவிட்ட
தவிப்பைச் சொல்கிறதா?
காதல் ஜோடியைக்
காணவில்லை என்கிறதா?

சிறிதும் எனக்கு
அர்த்தப்படவில்லை
அதன் மொழி!

ஆயினும்
காற்றோடு கலந்து வந்த
கிளியின் குரல்
விட்டுச் சென்றது எனக்குள்
ஒரு மெல்லிய சோகத்தை!

இரவில் வானம்

வட்டுக் கருப்பட்டியாய்
வட்ட வடிவ நிலா.
சுற்றிலுமிருந்து
சுவைத்திடப் படையெடுக்கின்றன
விண்மீன் சிற்றெறும்புகள்!